பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26-
நாட்டில் கடும் குற்றம் புரிந்தவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கும் நடைமுறையை பாஸ் கட்சி இன்று தற்காத்து பேசியுள்ளது.
கடற்படை பயிற்சி வீரர்,ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னைன்- யை கொலை செய்த குற்றத்திற்காக தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் ஆறு முன்னாள் மாணவர்களுக்கு அப்பீல் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து, தீர்ப்பு அளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டதில் தங்களுக்கு உடன்பாடுயில்லை என்று அறிவித்து இருக்கும் மனித உரிமை ஆணையமான SUHAKAM-மின் கருத்துக்கு எதிர்வினையாற்றுகையில் பாஸ் கட்சி இதனை தெரிவித்துள்ளது.
ஆறு மாணவர்கள் திருந்துவதற்கான மறுவாழ்வுக்குரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று SUHAKAM வாதிட்ட போதிலும் மரணத் தண்டனையும், ஒரு வகையான மறுவாழ்வு முறைதான் என்று பாஸ் கட்சியின் உலமா- மன்றத் தலைவர் அஹ்மத் யஹாயா கூறுகிறார்.
குற்றம் இழைத்தவர்களுக்கு இது போன்ற கடும் தண்டனை விதிக்கப்படும் போது, இத்தகைய குற்றம் இனியும் நடக்காமல் இருக்க சமுதாயத்திற்கு முன்கூட்டியே மறுவாழ்வுக்குரிய ஒரு போதனையை புகட்டுகிறது.
மரணத் தண்டனை நிறைவேற்றத்தின் நோக்கமும் மற்றவர்களுக்கு படிப்பிணையை உணர்த்துவதே என்று அந்த உலாமாத் தலைவர் கூறுகிறார்.