பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26-
மலேசிய அரசியல் வரலாற்றில் ம.சீ.ச.வின் முக்கியத் தலைவராக விளங்கிய பழம் பெரும் அரசியல்வாதி துன் மைக்கேல் சென் இன்று காலமானார். அவருக்கு வயது 92.மைக்கேல் சென் – னின் மறைவை அவரின் புதல்வி உறுதிப்படுத்தினார்.
தொழில் ரீதியில் வழக்கறிஞரான மைக்கேல் சென், அரசியல் பிரவேசத்திற்கு முன்பு தமது 24 ஆவது வயதில் பினாங்கை தளமாக கொண்டு, சீனப்பத்திரிகையின் நிருபராக பணியைத் தொடங்கி, அரசியல் வானில் மசீச.வின் துருவ நட்சத்திரமாக திகழ்ந்தார்.
மசீச.வின் மூன்றாவது தேசியத் தலைவரும், நாட்டின் இரண்டாவது நிதி அமைச்சருமான துன் டான் சியூ சின்- னின் அழைப்பை ஏற்று அரசியலுக்கு வந்தவரான மைக்கேல் சென், 1964 ஆம் ஆண்டு டமன்சாரா தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார்.
நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்- கினால் நாடாளுமன்ற செயலாளராக 5 ஆண்டுகளுக்கு மைக்கேல் சென் நியமிக்கப்பட்டார். 1969 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டாமன்சாரா தொகுதியில் தோல்விக் கண்ட மைக்கேல் சென் , 1972 இல் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மலேசியாவின் சிறப்புப்பணிகளுக்கான அமைச்சர், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர், முதலிய முக்கிய பொறுப்புகளை வகித்த மைக்கேல் சென்ஆகக்கடைசியாக 16 ஆண்டு காலம் கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று இருந்தார். கெராக்கான் கட்சியின் சார்பில் 1982 Beruas நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு மைக்கேல் சென் வெற்றி பெற்றுள்ளார்.