நகை விற்பனை விவகாரத்தில் மோசடி, இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு

செபராங் பெரை,ஜூலை 26-

பல ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்படும் அளவிற்கு தங்க நகைகள் மற்றும் விவேக கைப்பேசியான iPhone 15 Pro Max விற்பனை தொடர்பில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி, மோசடி செய்ததாக எட்டு வார கர்ப்பிணிப் பெண் உட்பட இரு பெண்கள் இன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

24 வயது கே. பிருந்தா பிரியா மற்றும் 25 வயது அனெட்டா யவெட் எட்வர்ட் என்ற அந்த இரு பெண்களும் மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் இரு பெண்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்னர்.

மோசடி தொடர்பில் கே. பிருந்தா பிரியா மற்றும் அனெட்டா யவெட் எட்வர்ட்- டிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

இவ்விரு பெண்களும் இவ்வாண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் ஜுலை 9 ஆம் தேதி வரையில் பினாங்கு மாநிலத்தில் செபராங் பெரை தெங்கா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த மோசடி வேலைகளை செய்துள்ளனர் என்று பிராசிகியூஷன் தரப்புக்கு தலைமையேற்ற துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அனிஸ் சுஹாதா ரோஸ்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் தங்களுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து, இவ்விரு பெண்களும் விசாரணயை கோரினர். அத்துடன் தங்களுக்கு குறைந்த ஜாமீன் தொகை விதிக்கப்பட வேண்டும் என்று தங்கள் கருணை மனுவில் கேட்டுக்கொண்டனர்.

குறிப்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு பெண்களில் அனெட்டா யவெட் எட்வர்ட்- டின் கணவர் மனநலம் பட்டவர் என்றும், அந்தப் பெண் தற்போது எட்டு வார கர்ப்பிணியாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் தலா 9 ஆயிரம் வெள்ளி ஜாமீன் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களின் அ னைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் ஹரித் முகமது மஸ்லான் உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS