ஃபத்லினா சிடெக், / பாஸ் கட்சியின் கல்வி அமைச்சர் அல்லர் / டிஏபி பாய்ச்சல்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26-

சீனப்பள்ளிகளின் கல்வித்திட்ட வளர்ச்சிக்கு மதுபான நிறுவனம் ஒன்று பல்வேறு வகைகளில் நிதி திரட்டி வருவதை, திடீரென்று புதிய சர்ச்சையாக உருவாக்கி, அரசியல் லாபத்தை தேடி வரும் பாஸ் கட்சிக்கு ஒத்து ஊதும் கல்வி அமைச்சர்ஃபத்லினா சிடெக், பாஸ் கட்சியின் கல்வி அமைச்சர் அல்லர் என்று டிஏபி இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுபான நிறுவனத்தின் நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் கட்சி மற்றும் அம்னோ இளைஞர் பிரிவுடன் கைகோர்த்து நிலைபாடு எடுப்பதை கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் நினைவுறுத்தினார்.

அந்த இரு கட்சிகளின் பிரதிநிதிகளைப் போல் சீனப்பள்ளிகளின் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் கல்வி அமைச்சர் என்ற முறையில் கடும் எச்சரிக்கை விடுத்து வரும் ஃபத்லினா சிடெக், தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகன்எம்.பி.யான லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.

டிஏபி-யுடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தில், அக்கட்சி இடம் பெற்றுள்ள பக்காத்தான் ஹராப்பானின் பிரதிநிதி என்ற முறையில் கல்வி அமைச்சராக ஃபத்லினா சிடெக் அமர்ந்து இருக்கிறாரே தவிர பாஸ் கட்சியின் கல்வி அமைச்சர் அல்லர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று லிம் குவான் எங் ஞாகப்படுத்தினார். .

சீனப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி நிதி திரட்டும் நிகழ்வுகளுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவு வழங்கி வரும் மதுபான நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து இதுவரையில் எந்தவொரு சர்ச்சையும் இல்லை. ஆனால், இன்று திடீரென்று அது குறித்து பாஸ் கட்சி கேள்வி எழுப்புகிறது என்பதற்காக அந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஒத்து ஊதி, சீனப்பள்ளிகளுக்கு கடும் நிபந்தனைகளை விதித்து வரும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தனது போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று டிஏபி- யின் அந்த மூத்த தலைவர் இன்று இரவு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS