கடற்படை பயிற்சி வீரர் சூசைமாணிக்கம் மரணம் / ஒரு கொலைக் குற்றமாகும் / ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லுமுட் , ஜூலை 29-

லுமுட், அரச மலேசிய கடற்படை பயிற்சி வீரர் J. சூசை மாணிக்கம் மரணம், ஒரு கொலை குற்றமாகும் என்று ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதேவேளையில் சூசைமாணிக்கத்தின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய இயலவில்லை
என்று மரண விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

27 வயது சூசை மாணிக்கத்தின் மரணம் அடையும் அளவிற்கு மருத்துவ உதவிகளை வழங்க மறுத்து விட்ட கடற்படையின் அதிகாரி, அவரின் மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் வஹாப் முகமது தடாடிலயான தீர்ப்பை வழங்கினார்.

இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் முக்கிய நபர்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் இதற்கு முன்பு மரண விசாணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து, அதற்கு பதிலாக கொலை குற்றம் என்று வகைப்படுத்த வேண்டியுள்ளது நீதிபதி அப்துல் வஹாப் தெரிவித்தார்.

எலியின் சிறுநீரில் காணப்படும் Leptospirosis பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரை உட்கொண்டதன் காரணமாக சூசைமாணிக்கத்திற்கு நுரையீரல் வீக்கம் ஏற்படுட்டிருப்பதை சான்றுகள் காட்டுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் லுமூட்டில் உள்ள கே.டி. சுல்தான் இட்ரிஸ் கடற்படைத் தளத்தில் நிகழ்ந்த சூசைமாணிக்கத்தின் மரணம்,கேடெட் பயிற்சிக்கு பொறுப்பான கடற்படை அதிகாரிகள், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்ததன் நேரடி விளைவுதான் அந்த இளைஞரின் மரணமாகும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

சூசைமாணிக்கத்தின் பிரேதப் பரிசோதனையில் முன்வைக்கப்பட்ட முக்கிய ஆதாரங்களை கருத்தில் கொள்ளாமலேயே மரண விசாரணை நீதிபதி ஐனுல் ஷாஹரின் முகமது தீர்ப்பு அளித்துள்ளார். இதுமிகப்பெரிய தவறாகும் என்று நீதிபதி அப்துல் வஹாப் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணம் நுரையீரல் வீக்கமே என மரண விசாரணை நீதிபதி ஐனுல் ஷாஹரின் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் ஆனால் அந்த மரணத்திற்கு காரணமானவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு கூறு முடியாது என்று அவர் தீர்பில் தெரிவித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி அப்துல் வஹாப் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி நிகழ்ந்த சூசைமாணிக்கம் மரணம் தொடர்பில் நடைபெற்ற இந்த விசாணையின் போது, சூசைமாணிக்கத்தை தரையில் படுக்கவைத்து பயிற்சி அதிகாரி கழுத்திலேயே மிதித்ததாகவும், அதனை மற்ற அதிகாரிகள் கண்டும் காணாததுமாக இருந்தனர் என்று இவ்வழக்கில் சூசைமாணிக்கத்துடன் பயிற்சியில் ஈடுபட்ட சக பயிற்சியாளர் இதற்கு முன்பு சாட்சியம் அளித்து இருந்தார்.

இவ்வழக்கில் தீர்ப்பை அறிவதற்கு சூசை மாணிக்கத்தின் தந்தை 71 வயது S. ஜோசப் மற்றும் அவரின் சகோதரர் 38 வயது சார்ல்ஸ் ஜோசப் ஆகியோர் ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

WATCH OUR LATEST NEWS