இஸ்ரேலிய ஆடவரின் விண்ணப்பம் நிராகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 30-

ஆறு துப்பாக்கிகளையும், 200 தோட்டாக்களையும் வாங்கியது தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய பிரஜை ஒருவர், செய்து கொண்ட விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகம் நிராகரித்துள்ளது.

அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்கியே ஆக வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மொஹமட் முஸ்தபா பி. கென்யாலம் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

38 வயது அவித்தன் ஷாலோம் என்ற அந்த இஸ்ரேலிய ஆடவர், கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான விசாரணை இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மேற்கண்ட விவரத்தை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS