கோலாலம்பூர், ஜூலை 30-
சர்வதேச நிலையில் துரித வளர்ச்சி கண்டு வரும் இதர நாடுகளுக்கு இணையாக மலேசியா முன்னேற்றம் காண முடியாமல் பரிதவிப்பதற்கு, தரம் குன்றிய, அற்பத்தனமான அரசியல்வாதிகளின் போக்குதான் காரணம் என்கிறார் மூத்தப் பத்திரிகையாளரும், வலைப்பதிவாளருமான இராகவன் கருப்பையா.
ஒரு சீனப் பள்ளிக்கான நன்கொடை நிகழ்ச்சியொன்றை சமயத்துடன் இணைத்து வீண் விதண்டாவாதம் செய்து ‘ஹீரோ’க்களாகக் காட்டிக் கொள்ள முனையும் வாதங்களில் நேரத்தை வீணடிக்கும் அந்த அரசியல்வாதிகளை எப்படிதான் வகைப்படுத்துவது என்று அவர் வினவுகிறார்..
வழக்கம் போல, கிட்டதட்ட எல்லா விஷயங்களிலும் சமயத்தைத் திணிக்கும் பாஸ் கட்சிதான் இந்த சர்ச்சையையும் தொடக்கி வைத்து குளிர் காய்கிறது என்று மலேசிய கினிக்கு எழுதிய கட்டுரையில் இராகவன் கருப்பையா சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு காலங்காலமாக மதுபான நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதுதான் இம்முறையும் நடந்துள்ளது. இதில் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை.
ஆனால், மதுபானம் மற்றும் சிகரெட் போன்ற பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் நன்கொடைகள் தொடர்பான கல்வியமைச்சின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சமயத் தீவிரவாத அரசியல்வாதிகள் போர்க் கொடி தூக்கியிருப்பது வியப்பை அளிக்கிறது.
இந்த விஷயத்தை நாடாளுமன்றம் வரை இழுத்துச் சென்று அங்கும் மணிக்கணக்கில் இதனை விவாதிக்கிறார்கள் என்பதை என்னவென்று சொல்வது? என்பது தெரியவில்லை.
அத்தகைய நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகள் பெறக்கூடாது என கல்வியமைச்சின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதுவும் கூட சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது.
ஏனெனில், அத்தகைய நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு செலுத்தும் மில்லியன் கணக்கான ரிங்கிட் வரிப்பணத்தில்தானே பள்ளிக்கூடமே நடத்தப்படுகிறது! ஆசிரியர்களின் சம்பளம் கூட அதிலிருந்துதானே பெறப்படுகிறது, எனும் உண்மையையும் நாம் புறம் தள்ள முடியாது.
அரசாங்கத்திற்கு வரியாக அந்நிறுவனங்கள் செலுத்தும் பணம் சட்ட ரீதியாக ‘நியாயம்’ என்றால் நன்கொடையாக அவை வழங்கும் பணம் மட்டும் எப்படி ‘சட்டவிரோதம்’ என்று பொருள்படும்? எனும் கேள்விக்கும் பதில் இல்லை என்கிறார் இராகவன் கருப்பையா.
மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் வியாபாரம் செய்யும் உணவக உரிமையாளர்களோ பேரங்காடி முதலாளிகளோ பள்ளிக்கூடங்களுக்கு நிதி உதவி வழங்க விரும்பினால் அதன் நிலைப்பாடு என்ன என்பதையும் கல்வியமைச்சு விளக்க வேண்டும்.
பிரிதொரு கோணத்தில் பார்க்கப் போனால் தமிழ், சீனப் பள்ளிகளுக்கும் தேசியப் பள்ளிகளைப் போலவே அரசாங்கம் சரிசமமாக நிதி ஒதுக்கீடு செய்தால் ஏன் இந்த அவலம்? எனும் கேள்வியும் எழவேச் செய்கிறது.
தமிழ், சீனப் பள்ளிகளை மாற்றான் பிள்ளையைப் போல ஒதுக்கி பாகுபாடு காட்டினால் பள்ளி மேம்பாட்டுக்கு தேவைப்படும் நிதிப் பற்றாக்குறைய சமாளிப்பதற்கு என்னதான் செய்வது? என்று மூத்தப் பத்திரிகையாளரான இராகவன் கருப்பையா வினவுகிறார்.