கோலாலம்பூர், ஜூலை 30-
பட்டங்களையும், உயரிய விருதுகளையும் பெறுகின்ற பிரமுகர்கள், அந்த விருதுகளை வழங்குகின்ற அரச பரிபாலனத்தின் மாண்பையும், நாட்டின் நற்பெயரையும் காக்க வேண்டும் என்று மேன்மைத் தங்கிய பகாங் சுல்தான்,சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
அரச பரிபாலனத்தால் வழங்கப்படுகின்ற ஒவ்வொரு விருதும் வெறும் பாராட்டு மட்டுமல்ல, மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய சின்னமாகும்.
ஒவ்வொரு விருதையும் பெறுகின்றவர், அதனை தனது ஆணவத்திற்கும், கர்வத்திற்கும் ஒரு பகட்டாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. மாறாக, தனது ஒவ்வொரு செயலிலும் விசுவாசம், மரியாதை மற்றும் நீதியின் மாண்பை பேண வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
இத்தகைய விருதுகள் பெற்றவர்களின் நடவடிக்கைகள், அரச பரிபாலனத்தின் நற்பெயருக்கும், நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால், அவர்களின் தவறான நடத்தைக்காக அந்த விருதுகள் பறிக்கப்படும் என்று சுல்தான் அப்துல்லா எச்சரிக்கை விடுத்தார்.
மேன்மைத் தங்கிய பகாங் சுல்தானின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குவந்தான், Balai Mahkota Istana Abdulaziz அரண்மனையில் நடைபெற்ற விருதளிப்பு சடங்கின் போது சுல்தான் அப்துல்லா மேற்கண்ட நினைவுறுத்தலை தமது உரையில் விடுத்தார்.