கோலாலம்பூர், ஜூலை 30-
நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் எந்தவொரு சமரசப் போக்கிற்கும் இடமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
சபா மீது பிலிப்பைன்ஸ் உரிமை கோரிய போது, எங்கள் நிலத்தில் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் / எங்கள் நாட்டின் உரிமைகள் மற்றும் இறையாண்மை சம்பந்தப்பட்ட எந்தவொரு சமரசப் பேச்சுவார்த்தைக்கும் இடமே இல்லை என்றும் / மலேசியா தனது உறுதியான நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் மலேசியாவிற்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான அரச தந்திர உறவு நான்றாகவே உள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் Ferdinand Marcos Junior – ருடன் தாம் இன்னமும் நெருக்கமான அளவிலே நட்பு பாராட்டி வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிபிட்டார்.
இன்று புத்ராஜெயாவில் தேசிய பாதுகாப்பு மாத கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சபாவில் நடந்த ஊடூருவல் மற்றும் பதிலடித் தாக்குதல் எதிர்பாராத சூழ்நிலையில் நிகழ்ந்துள்ளது என்பதை வரலாறு நிரூபித்து இருப்பதை நமது பாதுகாப்பு படையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
சபா மாநிலத்தின் இறையாண்மையை மறுக்கும் ஆதாரமற்ற தவறான உள்ளடக்கத்தைக்கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் இதற்கு முன்பு வைரலானது தொடர்பில் பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
சபா, மலேசியாவின் ஒரு பகுதியாகும். 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சபா இணைந்தது மூலம் மலேசியா உருவாக்கம் கண்டது என்பது ஐநா.வினால் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.