சுங்கை சிப்புட், ஜூலை 30-
சுங்கை சிப்புட், லிந்தாங், கம்போங் சுங்கை டுரியன் கிராமத்தில் சுற்றித் திரிந்த மூன்று காட்டு யானைகள், வன விலங்கு, தேசிய பூங்கா இலாகாவான பெர்ஹிலிதன்- னினால் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டன.
5 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் யானை மற்றும் இரண்டு பெண் யானைகள், கடந்த ஒரு வார காலமாக சுங்கை சிப்புட் கிராமப்பகுதிகளில் சுற்றித் திரிந்ததுடன், உள்ளூர் மக்களின் பழந்தோட்டங்களையும் சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தனர்.
விவசாயிகள் பலர், தங்களின் பழந்தோட்டங்களிலும் நுழைய முடியாத அளவிற்கு பெரும் அச்சுறுத்தலை அந்த யானைகள் ஏற்படுத்தி வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த மூன்று யானைகளும் பேரா மாநில பெர்ஹிலிடன் உதவியுடன் பகாங், லாங்காங், குவாலா காண்டா தேசிய யானை பாதுகாப்பு மையத்தின் பாகன்கள் மூலம் லாவகமாக பிடிக்கப்பட்டன. இந்த யானைகள் 800 கிலோ முதல் 1.2 மெட்ரிக் டன் எடை கொண்டதாகும் என்று பேரா மாநில பெர்ஹிலிதன் தலைவர் யூசுஃப் ஷெரீப் தெரிவித்தார்.