புத்ராஜெயா, ஜூலை 30-
நாட்டில் மனிதக் கடத்தல் நடவடிக்கையை முறியடிப்பதற்கு ஒருங்கிணைந்த முறையை உள்துறை அமைச்சு தொடங்கியுள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.
சிறார்களை இலக்காக கொண்டு மனிதக் கடத்தல் வாயிலாக மலேசியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.
வங்காளதேசத்தைச் சிறார்கள் மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் சம்பவம், அடுத்த ஆண்டு அமெரிக்க சட்டத்துறையினரால் வெளியிடப்படவிக்கும் 2025 ஆம் ஆண்டு மனித கடத்தல் அறிக்கையில் எதிர்முறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் இதனை முறியடிப்பதற்கு எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகளை மலேசியா இவ்வாண்டு பெற்று விட்டதால் இதன் மூலம் மனிதக் கடத்தலை முறியடிக்க முடியும் என்று சைபுடின் நம்பிக்கை தெரிவித்தார்.