முன்னணி எழுத்தாளர் ரய்லி முனியாண்டி காலமானார்

ஜூலை 31-

மலேசிய தமிழ் இலக்கிய சோலையில் மேலும் ஒரு மலர் உதிர்ந்தது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சிலாங்கூர், கெர்லிங்- கைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான ரய்லி முனியாண்டி காலமானார். அவருக்கு வயது 72.

ஜோகூர், ஸ்கூடாயில் உள்ள தனது மகனின் இல்லத்தில் இருந்த போது கடந்த சனிக்கிழமை மூளை பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் ரய்லி முனியாண்டி, ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுயநினைவு இழந்த நிலையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக அவரின் மகன் மதன்குமார் தெரிவித்தார்.

தமிழ்நேசன், தினமணி, தமிழ் ஓசை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை உட்பட தமிழ் நாளிதழ்களுக்கும், மாத, வார இதழ்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதி, மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நிறைவான பங்களிப்பை வழங்கியவரான ரய்லி முனியாண்டியின் மறைவு இலக்கிய ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பேரா, சுங்காய், நார்பரோ தோட்டத்தில் பிறந்த வளர்ந்தவரான முனியாண்டி சதன் என்ற இயற்பெயர் கொண்ட ரய்லி முனியாண்டி, 1979 ஆம் ஆண்டு ருக்குமணி என்பவரை கரம்பிடித்து, கெர்லிங் தோட்டத்தில் பந்துவான் போலிஸ், பாதுகாவலராக பணியாற்றி வந்தார். அவருக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர்.

தோட்டத் சூழலில் வாழ்ந்தவரான ரய்லி முனியாண்டி, தனது சிறுகதைகள் மற்றும் கவிதைகளுக்கு தோட்டப்புற சூழலை மையக் கருத்தாக கொண்டு அதிகமான படைப்புகளை தந்த முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். திகிழுட்டும் அதிகமான ஒரு பக்க கதைகளை எழுதிய பெருமையும் இவரையே சாரும்.

எழுத்துப்பணிகளுக்கு மத்தியில் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ரய்லி முனியாண்டி, உலு சிலாங்கூர் மஇகா தொகுதியின் முன்னாள் செயலாளராகவும், கெர்லிங் தோட்ட மஇகா தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

. தோட்ட தோட்டா மற்றும் காலம் சொல்லும் கவிதை 100 ஆகிய தலைப்புகளில் தாம் எழுதிய இரண்டு நூல்களை ரயிலி முனியாண்டி மலேசிய தமிழ் இலக்கிய உலகிற்கு விட்டு சென்றுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக தனது மகனுடன் ஜோகூர் ஸ்கூடாயில் வசித்து வந்த ரயிலி முனியாண்டியின் நல்லடக்கச் சடங்கு, நாளை வியாழக்கிழமை எண்.10,ஜாலான் ஹாங் கஸ்தூரி 7, தாமன் ஸ்குடாய், ஸ்குடாய் ஜோகூர் என்ற முகவரியில் நடைபெறும் என்று அவரின் புதல்வர் சதன்குமார், திசைகளிடம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS