போலீஸ் புகார் செய்கிறார் சூசை மாணிக்கத்தின் தந்தை

கோலாலம்பூர், ஜூலை 31-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு லுமூட், கேடி சுல்தான் இட்ரிஸ் கடற்படைத் தளத்தில் ஒரு பயிற்சி வீரரான தனது மகன் சூசை மாணிக்கம் மரணம் அடைந்த சம்பவம் ஒரு கொலையாகும் என்று ஈப்போ உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து அந்த பயிற்சி வீரரின் தந்தை ஜோசப் சின்னப்பன், நாளை வியாழக்கிழமை போலீசில் புகார் செய்யவிருக்கிறார்.

காலை 10.30 மணிக்கு பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தில் ஜோசப் இந்த புகாரை பதிவு செய்யவிருக்கிறார்.தனது மகனின் இறப்புக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று தனது போலீஸ் புகாரில் கேட்டுக்கொள்ளப் போவதாக 72 வயதுடைய ஜோசப் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 27 வயதுடைய சூசை மாணிக்கம், நுரையீரல் வீக்கத்தினால் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வந்ததற்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அந்த பயிற்சி வீரர் மரணம் அடைந்துள்ளார் என்றும் இது கொலைக்குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவ்வாரம் முற்பகுதியில் ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் வஹாப் முகமது தமது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். .

WATCH OUR LATEST NEWS