இந்திய சமூக விவகாரங்களுக்கான தேசிய மன்றம் நிறுவப்பட வேண்டும்

ஜூலை 31-

இந்திய சமூக பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் செயல் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று திட்டங்களில் ஒன்று, இந்திய சமூக விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தை அமைப்பதாகும் என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

மித்ராவின் கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒரு தேசிய மன்றம் அமைக்கப்படுவதற்கு தங்கள் அமைச்சு முன்மொழிந்துள்ளதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.

இந்த மன்றத்திற்கு பிரதமர் தலைமையேற்க வேண்டும் என்பதுடன் மித்ராவினால் உருவாக்கப்படவிருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையின் மன்றத்தின் உறுப்பினர்கள் முடிவு செய்யப்பட வேண்டும். தவிர மித்ராவினால் அமல்படுத்தப்படும் திட்டங்கள், அந்த அரசாங்க ஏஜென்சியின் புதிய இலக்குக்கு ஏற்ப நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு ஒரு முழுமையான அணுகுமுறையை மித்ரா மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துணை அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மித்ரா கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அந்த அரசாங்க ஏஜென்சி, கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அக்காலக்கட்டத்தில், / இந்திய சமுதாயத்தின் B40 தரப்பினரின் சமூகவியல், பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய அமைப்பாக மித்ரா விளங்கிட, அதனை சீரமைப்பதற்கு தேசிய ஒற்றுமை துறை அமைச்சு ஒரு செயல் திட்டத்தை வரைந்ததாக சரஸ்வதி தெரிவித்தார்.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை புத்ராஜெயா, Dewan Damar Sari யில் நடைபெற்ற இந்திய சமுதாயத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், பிற அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசாங்க ஏஜென்சிகள் என 115 பேர் பங்கேற்ற இரண்டு நாள் பட்டறையின் மூலம் மித்ராவின் இந்த செயல்திட்ட வரைவின் அம்சங்கள் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். .

மித்ராவிற்கு மூன்று மாத காலம் பொறுப்பேற்ற அமைச்சு என்ற முறையில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு வரைந்த அந்த செயல்திட்டம், கடந்த ஜுலை 17 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் ஒப்படைத்ததாகவும், பிரதமரும் நேர்மறையான கருத்துகளை தெரிவித்ததாகவும் துணை அமைச்சர் சரஸ்வதி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS