மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் நடித்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு ரூ.100 கோடி வசூலித்து இருக்கிறது.
கோலிவுட்டில் ஒரு வெர்சடைல் ஆக்டர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அசால்டாக செய்து அப்ளாஸ் வாங்கிவிடுவார். அவர் தற்போது பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்மையில் தனது 50வது படத்தில் நடித்து முடித்தார். அப்படம் தான் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் மம்தா மோகன்தாஸ், அனுராக் கஷ்யப், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. திரில்லர் படமாக இது வெளியானது.

மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. சுமார் 100 கோடி வசூலித்தது இப்படம். நடிகர் விஜய் சேதுபதி கெரியரில் அவர் ஹீரோவாக நடித்து ரூ.100 கோடி வசூல் அள்ளிய முதல் படம் மகாராஜா தான். இப்படத்தை இந்தியில் ரீமே செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர்கான் கைப்பற்றி இருக்கிறார்.

இந்நிலையில், மகாராஜா படம் பற்றி மற்றுமொரு ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.20 கோடி தானாம். அதைவிட அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தாராம். படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பின்னர் அப்படத்தின் லாபத்தில் இருந்து அவர் ஷேர் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.