கோலாலம்பூர், ஆகஸ்ட் 01-
நாட்டின் முன்னணி சங்கிலி தொடர்பு வர்த்தக வளாகமான KK Supermart குழுமத்தின் நிறுவனரும், தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் தலைமையில் மலேசிய பேராளர்கள் குழு, மொரிசியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு , அந்நாட்டில் உள்ள சாத்தியமான வர்த்தக வாய்ப்புகளை கண்டறிந்தனர்.
இப்பயணத்தின் போது மொரிசியஸ் நாட்டின் முதன்மை வேளாண்மை உற்பத்தியாளர் வணிக கூட்டுறவு சங்கத்துடன் பல்வேறு ஒத்துழைப்பு மற்றும் வணிக வாய்புகளை ஆராய்வதற்கு டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் , ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மலேசியாவிற்கும் மொரிசியஷிற்கும் இடையிலான வர்த்தக உறவு படிப்படியாக வளர்ந்து வருகிறது. அண்மைய புள்ளி விவரங்களின்படி இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம், கவரத்தக்க நிலையை எட்டியுள்ளது. இது வலுவான பொருளாதார உறவுகளை பிரதிபலிக்கும் நிலையில், 2023 ஆம் ஆண்டில் மலேசியாவிற்கும் மொரிசியஸிற்கும் இடையிலான மொத்த வர்த்தக அளவு 135 கோடி வெள்ளியாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் KK Supermart குழுமத்தின் நிறுவனர் டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் மற்றும் அவர் தலைமையிலான மலேசிய பேராளர்கள் குழுவினர் மேற்கொண்டுள்ள இந்த வருகை மலேசியாவிற்கும், மொரிசியஸிற்கும் இடையில் இருவழி வர்த்தக வாய்ப்புகளை பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் , மற்றும் டத்தோ பர்தீப் குமார் தலைமையிலான மலேசிய பேராளர்கள் குழுவினருடன் சிங்கப்பூர், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் வர்த்தக பிரநிதிகளை உள்ளடக்கிய பேராளர்கள் குழுவினரை மொரிசியஸ் அதிபர் பிருத்விராஜ்சிங் ரூபன் ஜி.சி.எஸ்.கே .- வரவேற்று, அவர்களுடன் சந்திப்பை நடத்தினார்.
மலேசிய பேராளர்கள் குழுவின் இந்த வரவேற்பில் மொரிசியஸ் நாட்டின் வர்த்தக , பயனீட்டாளர் துறை அமைச்சர்மேரி கிறிஸ்டின் டோரின் சுகோவ்ரி , மொரிசியஸ் நாட்டிற்கான மலேசியத் தூதர். மொரிசியஸ் பொருளாதார மேம்பாட்டு வாரியப் பொறுப்பாளர்கள், மற்றும் அந்நாட்டின் சீன, இந்து வர்த்தக சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.