கெரிக், ஆகஸ்ட் 01-
தனது மனைவியை சரமாரியாக அடித்து, கழுத்தை நெரித்து, பாதாளத்தில் தள்ளியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பேரா, கெரிக், ஜாலான் ராயா திமூர் பராத் கெரிக் – ஜெலி சாலையின் 31.2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் உயிர் தப்பிய பெண்ணிடமிருந்து கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து 39 வயதுடைய அந்த நபரைகெடா, பாலிங் போலீசார் கைது செய்துள்ளதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர்சுப்பரின்டெண்டென் ஸுல்கிபிலி மஹ்மூத் தெரிவித்தார்.
அந்த கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் பள்ளத்தாக்கில் கிடந்த அந்த மாதுவை காப்பாற்றிய பொது மக்கள், அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கோலாலம்பூருக்கு வேலை விஷயமாக செல்வதாக கூறி, தனது மனைவியை பேராவில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, அந்த நபர், அந்த பள்ளத்தாக்குப்பகுதியில் கொண்டு சென்றுள்ளார்.
அங்கே சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு மனைவியிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுப்பரின்டெண்டென் ஸுல்கிபிலி மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார்.