புத்ராஜெயா, ஆகஸ்ட்02-
அரசாங்கத்திற்கு எதிராக தங்களின் ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துவதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை கண்ணீர் வெடிகுண்டு வீச்சு நடத்தி, அடித்து விரட்டிய அரசாங்கம் அல்ல……. மடானி அரசாங்கம் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெளிவுபடுத்தினார்.
அதேபோன்று அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் எண்ண அலைகளையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் மக்களை ஓபிஎஸ் லாலாங் என்ற போர்வையில் பிடித்து சிறையில் தள்ளும் அரசாங்கமும், மடானி அரசாங்கம் அல்ல.
மாறாக, தங்கள் அதிப்தியை வெளிப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரொட்டியும், தண்ணீரும் கொடுத்த உபசரித்த அரசாங்கம்தாம் மடானி அரசாங்கம். இதனை பிரதமரின் சொந்த தொகுதியான தம்புன்- னில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நடப்பு அரசாங்கம் எத்தகைய கவனிப்பை வழங்கியது என்பதை நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும் என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், மக்களின் குறைகளை கேட்டறிம் ஓர் அரசாங்கமாகும்.
அத்தகைய அரசாங்கத்தை, இதுவரையில் தாம் கண்டிராத மிக சர்வாதிகாரமிக்க அரசாங்கம் என்று பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் முத்திரை குத்தியிருப்பது, கடந்த கால அரசாங்கங்களை அவர் திரும்பிப் பார்க்க வேண்டும்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அந்த அரசாங்கங்கள், அடிதடி பிரயோகம் நடத்தியதை மீள்பார்வை செய்து, மதிப்பீடு செய்ய வேண்டும் என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபஹ்மி இதனை வலியுறுத்தினார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்று இருந்த துன் மகாதீர் முகமது நிர்வாகத்தில் ஓபிஎஸ் லாலாங் என்ற பெயரில் நூற்றுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டமான இசாவின் கீழ் இரும்புக்கரம் கொண்டு இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு,கமுந்திங் தடுப்பு முகாமில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
அதனை மேற்கோள்காட்டும் வகையிலேயே அம்பிகாவிற்கு எதிரான பதிலடியில் அமைச்சர் ஃபஹ்மி, ஓபிஎஸ் லாலாங் கைது நடவடிக்கையை உவமை காட்டி பேசினார்.