கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-
கோலாலம்பூர், பூச்சோங், கின்ராரா-வில் உள்ள வணிக தலத்தில் அமைந்துள்ள கடைகளில் மலேசிய குடிநுழைவு துறையினர் மேற்கொண்ட சோதனையில், அலி பாபா உரிமையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வந்த மொத்தம் 71 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை மணி 11.50-க்கு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், கைதானவர்களில், 16 பேர் பெண்கள் என்றும் ஏழு மாத குழந்தை உட்பட இருவர் சிறுவர்கள் என்றும் மலேசிய குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த சோதனையில், கள்ளக்குடியேறிகளைப் பணிக்கு அமர்த்திய குற்றச்சாட்டு தொடர்பாக, ஒரு இந்தியர் உட்பட மொத்தம் 14 மலேசியர்களும் பிடிப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளக்குடியேறிகளைப் பணிக்கு அமர்த்தும் அல்லது அடைக்கலம் தரும் எந்தவொரு தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.