ஈப்போ , ஆகஸ்ட் 02-
பேரா மாநில இஸ்லாமிய சமய இலாகாவினர், கோலாலம்பூரில் உள்ள ஒரு கோயிலுக்கு வருகை மேற்கொண்டது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளியினால் ஏற்பட்ட குழுப்பத்திற்கும், தவறான புரிதலுக்கும் அந்த சமய இலாகா விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அடாட் மேலயு பேராக், இஸ்லாமிய சமய மன்றம், பேரா முஃப்தி இலாகா ஆகியவற்றுடன் பேரா மாநில இஸ்லாமிய சமய இலாகா நடத்திய சிறப்புக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேரா மந்திரி பெசார் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா- வின் ஆலோசனையின் பேரில் இந்த சிறப்புக்கூட்டம் நடைபெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் நலன் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை பாதுகாக்கும் கடப்பாட்டில் உள்ள மாநில சமய இலாகாவின் நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மைக்கு இழுக்கு ஏற்படாமல் இருப்பதற்கு இவ்விவகாரத்தில் எழுந்துள்ள அவதூறு மற்றும் தவறான புரிதலை தவிர்க்கும் வகையில் அவ்விலாகா இவ்விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.