கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-
முகநூலில் ஒருவரையொருவர் எதிர்த்து அவதூறான கருத்தை பதிவேற்றம் செய்தது தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சமயப் போதகர் முஹம்மது ஜம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் அருண் துரைசாமி ஆகியோர் தங்களுக்கு இடையில் தலா ஒரு லட்சம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையை வழங்கிக் கொள்ள வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜம்ரி வினோத்திற்கு அருண் துரைசாமி ஒரு லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும். அதேவேளையில் அருண் துரைசாமிக்கும் , சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சிதி காசிம்- மிற்கும் சமயப் போதகர் ஜம்ரி வினோத், தலா ஒரு லட்சம் வெள்ளி வீதம் மொத்தம் 2 லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜாம் லீ கின் ஹொவ் இன்று மாலையில் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்தார்.
தான் கற்பழித்தப் பெண்ணையே ஜம்ரி விநோத் திருமணம் செய்து கொண்டதாக அருண் துரைசாமி குற்றஞ்சாட்டிய வேளையில் அருண்துரைசாமியும்,சிதி காசிம்- மும் இஸ்லாத்தின் எதிரிகளாவர் என்று ஜம்ரி வினோத் குற்றச்சாட்டியதாக இரு தரப்பினரும் தத்தம் அவதூறு வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இதன் தொடர்பில் இழப்பீட்டுத்தொகைக்கு அப்பாற்பட்டு, தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்ளும் வகையில் இருவரும் தங்களின் முகநூலிலும், உள்ளூர் நாளிதழிலும் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பில் தமது வழக்கறிஞருடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று ஜம்ரி வினோத் தெரிவித்துள்ளார்.