கிளந்தான்,ஆகஸ்ட் 03-
மலேசியா – தாய்லாந்து எல்லையில் தாய்லாந்து, Narathiwat மாநிலத்திற்கும், கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங்- கிற்கும் இடையில் பாயும் பிரதான நதியான சுங்கை கோலோக் ஆற்றில் இரண்டாவது பாலத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு மலேசியாவும், தாய்லாந்தும் இன்று இணக்கம் கண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தாய்லாந்து Narathiwat மாநிலத்தில் Sungai Golok – கில் அமைந்துள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் நோய்தடுப்பு CIQ கட்டடத்தில் தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin- னுடன் நடத்திய சந்திப்பின் போது, இதற்கு இணக்கம் காணப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இரு நாடுகளின் எல்லையில் வீற்றிருக்கும் அந்த நதியினால் அருகாமையில் வாழும் மக்கள் எதிர்நோக்கி வரும் வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அந்த நதி முகத்துவாரத்தில் தூய்மைப்படுத்தும் பணியை துரிதப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் இணக்கம் கண்டு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அண்டை நாடுகள் என்ற முறையில் தாய்லாந்தும், மலேசியாவும் நட்பு பாராட்டி வருகின்ற காரணத்தினால், இந்த நல்லுறவின் வாயிலாக இரு நாட்டு மக்களும் பயன்பெற முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.