கோலாலம்பூர், ஆகஸ்ட் 07-
6 மாநிலங்களின் மந்திரி பெசார்கள் மற்றும் ஒரு மாநில முதலமைச்சர் ஆகியோர் பெறுகின்ற சம்பளத்துடன் ஒப்பிடுகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சம்பளம் மிக குறைவாகும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
சபா, சரவா முதலமைச்சர்கள், திரெங்கானு மற்றும் பகாங் மந்திரி பெசார்கள் மாதம் ஒன்றுக்கு குறைந்தது 30 ஆயிரம் வெள்ளி சம்பளம் பெறுகின்றனர். ஆனால் பிரதமர் மாதம் ஒன்றுக்கு 22 ஆயிரத்து 826 வெள்ளியை சம்பளமாக பெறுகிறார்.
அரசாங்க கட்டமைப்பில் நாட்டை நிர்வகிக்கும் பிரதமருக்கே அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், பிரதமருக்கு குறைந்த சம்பளமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றது முதல் அந்த குறைந்த சம்பளத்தைக்கூட வாங்குவதில்லை.
முதலமைச்சர் வரிசையில் சரவா முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபேங் அதிக சம்பளம் பெறுகிறார். அவருக்கு மாதம் ஒன்றுக்கு 39 ஆயிரம் வெள்ளி சம்பளம் வழங்கப்படுகிறது. பிரதமரின் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபேங், பெறுகின்ற சம்பள விகிதம் 71 விழுக்காடு கூடுதலாகும்.
அதேவேளையில் சபா முதலமைச்சர் ஹாஜி நூர் மாதம் ஒன்றுக்கு 33 ஆயிரத்து 33 வெள்ளியை சம்பளமாக பெறுகிறார். இது பிரதமர் பெறுகின்ற சம்பளத்துடன் ஒப்பிடுகையில் 45 விழுக்காடு கூடுதலாகும்.
மிக குறைவான சம்பளம் பெறுகின்ற முதலமைச்சராக பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் விளங்குகிறார். அவருக்கு மாதச் சம்பளம் 14 ஆயிரத்து 175 வெள்ளியாகும். பிரதமர் பெறுகின்ற சம்பளத்துடன் ஒப்பிடுகையில் பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் பெறுகின்ற சம்பளம் 38 விழுக்காடு குறைவாகும்.
சௌ கோன் இயோவ் -வை விட ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காஜி சற்று கூடுதலாக சம்பளம் பெறுகிறார். அவருக்கு 14 ஆயிரத்து 907 வெள்ளி சம்பளமாக வழங்கப்படுகிறது.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீன் ஹாருன் மற்றும் மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரவூப் ஆகியோர் 20 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.