வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்கு என்ன காரணம்? இந்தியாவை எவ்விதம் பாதிக்கும்?

7 ஆகஸ்ட் 2024

வங்க தேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

ஒரு மாதத்திற்கு முன்பு வரை, வங்கதேசத்தில் இப்படி ஒரு நிலை ஏற்படும் வரும் என யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. வங்கதேசம் இந்தளவு நிலைதன்மையற்ற நிலைக்கு சென்றது எப்படி? அங்குள்ள நிலை இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்?

இந்த மொத்த விவகாரமும் 1971ல் நிகழ்ந்த வங்கதேச விடுதலைப்போர் உடன் தொடர்புடையது. அதில் சாமானிய மக்கள் பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வங்கதேசத்தை தங்களுக்காக பெற்றனர். இந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கும் சந்ததியினருக்கும் அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

2018ல் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. பின்னர் ஷேக் ஹசீனா அரசு அனைத்து வகையான இட ஒதுக்கீட்டையும் நிறுத்தியது. ஆனால் ஜூன் 2024 இல், அந்நாட்டு உயர் நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.

இதையடுத்து இளைஞர்கள் மீண்டும் வீதியில் இறங்கினர். நாட்டிற்காக போராடியவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது நல்லதுதான், ஆனால், அதை ஏன் அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் அவர்களின் வாதம்.

மேலும் இந்த இடஒதுக்கீட்டால் ஹசீனா கட்சியருக்கோ அல்லது அவரது ஆதரவாளர்களுக்கோ நன்மை கிடைக்கக்கூடும் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்.

தொடக்கத்தில் எவ்வித வன்முறையும் இன்றிதான் போராட்டங்கள் நடந்தன. ஆனால், ஷேக் ஹசீனாவின் ஒரு கருத்து போராட்டக்காரர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜூலை14ஆம் தேதி தேசிய தொலைக்காட்சியில் பேசிய அவர் போராட்டக்காரர்களை ரஜாக்கார்கள்(Razakar) என்று அழைத்தார். ரஜாகர் என்பது வங்கத்தேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவியர்களை குறிப்பிட வங்கதேசத்தில் பயன்படுத்தப்படும் இழிவான வார்த்தையாகும்.

சொல்லபோனால், இந்த வார்த்தை வங்கதேசத்தில் தேச துரோகியை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.

இடஒதுக்கீட்டின் பலனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என்றால், ரஜாகாரின் பேரக்குழந்தைகளுக்கு வழங்க வேண்டுமா?’ என்று ஷேக் ஹசீனா கூறியிருந்தார்.

போராட்டம் தீவிரமடைந்தபோது, அதனை ஒடுக்க காவல்துறை அனைத்து வகையிலும் முயன்றது. அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு போரட்டக்காரர்களை கண்டதும் சுடும் உத்தரவும் காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, 30 சதவீத இடஒதுக்கீடு என்பதை 5 சதவீதமாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் குறைத்தது. ஆனால், அதன் தாக்கம் சில நாட்கள் மட்டுமே நீடித்தது.

இடஒதுக்கீடுக்கும் எதிரான போராட்டம் தற்போது அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. மக்கள் மீண்டும் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். ஆகஸ்ட் 4ஆம் தேதி போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 90 பேர் உயிரிழந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.

இருந்தபோதும், ஆகஸ்ட் 5ஆம் தேதி வங்கத்தேசத்தின் பாகுபாடுக்கு எதிரான மாணவர் இயக்கத்தினர் பேரணியை தொடங்கினர். அவர்களின் ஒரே கோரிக்கை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான். வேறுவழியின்றி அவரும் பதவி விலக வேண்டியதாயிற்று.

இந்த விவகாரத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஷேக் ஹசீனா அவரது பதவிகாலத்தில் சந்தித்த மிகப்பெரிய சவாலாக இந்த விவகாரம் இருந்தது. வங்கதேசத்தின் சூழலை உற்று கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், ‘ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எந்தவொரு அரசியல் கட்சிகளின் கோரிக்கை மட்டுமல்ல, பெருந்திரளான வங்கதேச மக்களின் கோரிக்கை என நம்புகின்றனர்.

ஷேக் ஹசீனா கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். மேலும் ஹசீனா வங்கதேச சுதந்திரப் போராட்டத்தின் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஆவார். ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார ரீதியாகவும் வங்கதேசம் முன்னேற்றம் கண்டது.

தெற்காசியாவின் வலுவான பொருளாதாரமாகவும் வங்கதேசத்தின் பொருளாதாரம் மாறியது. ஆனால், இந்த வளர்ச்சி வேலையை உருவாக்கவில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, வளர்ச்சி இருக்கிறது ஆனால் வேலை இல்லை, அதிகமானவர்கள் படித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வரும்போது, ​​வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அது நடக்கவில்லை.

தேர்தல் நியாயமாக நடைபெற அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ஷேக் ஹசீனா மீது உள்ளது. எனவே பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி ஜனவரியில் முடிவடைந்த வங்கதேச பொதுத் தேர்தலைப் புறக்கணித்தது.

அதன்பிறகு, ஷேக் ஹசீனா சமீபத்திய போராட்டங்களை காவல்துறையின் கண்டிப்புடன் சமாளித்த விதம், மாணவர்களிடையே கோபத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஆனால் இப்போது இந்தியா என்ன செய்யும்?

அண்டைநாடான வங்கதேசத்தின் சுதந்திர போரில் இந்தியா பெரும்பங்காற்றி இருக்கிறது. அப்படியிருக்கும்போது, அந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டால், அது இந்தியாவை எந்தவகையில் பாதிக்கும்?

வங்கதேசத்தின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு உள்ளது. தெற்காசியாவின் அமைதி குறித்த பார்வையில் வங்கதேசம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.

வர்த்தகம், எரிசக்தி, போக்குவரத்து, தீவிரவாதிகளை ஒடுக்குதல் போன்ற விஷயங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வருகின்றன. ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சியுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. எனவே, அங்கு எந்த வகையான ஸ்திரமின்மை ஏற்பட்டாலும் அது இந்தியாவை பாதிக்கும். மேலும், அதன் தாக்கம் தெற்காசியா முழுவதும் காணப்படும்.

வேலை அல்லது படிப்புக்காக வங்கதேசம் சென்ற இந்திய குடிமக்களிடம் திரும்புமாறு இந்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தற்போது, ​​இந்தியாவும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள எல்லையில் அதிக விழிப்புடன் உள்ளது. ஏனெனில் இந்த நிலையற்ற தன்மையால் பலர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வரலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மாறாக, இந்த உறுதியற்ற தன்மையால், அங்குள்ள சிறுபான்மை இந்துக்களும் ஆபத்தில் இருக்கக்கூடும்.

ஆனால், வங்கதேசத்தில் நடக்கும் வன்முறைகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, , அங்கு என்ன நடந்தாலும் அது வங்கதேசத்தின் உள்விவகாரம், அதில் இந்தியா தலையிடாது என தெரிவித்தது.

வங்கதேச கிராமின் வங்கியின் நிறுவனரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ், இந்தியாவின் நிலைப்பாடுதொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசிய அவர், “இந்தியாவின் இந்த அணுகுமுறை வேதனை அளிக்கிறது. ஒரு சகோதரனின் வீடு தீப்பிடித்தால், அதை நான் எப்படி உள்விவகாரம் என்று கூற முடியும்?” என கூறியுளார்.

வங்கதேசத்தில் எது நடந்தாலும் அங்கு ஜனநாயகம் இல்லாததால்தான் நடந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முகமது யூனுஸ் கருத்து வங்கதேசத்தின் பெரும் பகுதியினரின் உணர்வு என்றால் அது இந்தியாவுக்கும் நல்ல அறிகுறி அல்ல.

இனி, அங்கு அமைக்கப்படும் இடைக்கால அரசுடன் நல்லுறவைப் பேணுவது இந்திய அரசுக்கு சவாலாக இருக்கும். மேலும் அங்கு அமைக்கப்படும் அரசுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும், அதில் இந்தியாவின் உதவி தேவைப்படலாம்.

WATCH OUR LATEST NEWS