புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-
13 ஆண்டுகளுக்கு முன்பு, பேரா மாநில கால்நடை இலாகாவின் பெண் துணை இயக்குநர் டாக்டர் ரோஹானி காசிம் – மை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பாதுகாவலருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
அந்த முன்னாள் பாதுகாவலுக்கு எதிரான குற்றவியல் தீர்ப்பை நிலைநிறுத்திய கூட்டரசு நீதிமன்றம், மரணத் தண்டனைக்குப் பதிலாக 38 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
32 வயதுடைய சியாமி என்ற அந்த ஆடவர், இக்கொலை குற்றத்தை புரியும் போது அவருக்கு 20 வயது என்பதை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனை ரத்து செய்வதாக கூட்டரசு நீதிமன்றம் அறிவித்தது.
இன்னும் திருமணம் ஆகாத 38 வயதுடைய அந்த பெண் மருத்துவ இயக்குநரை கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பேராக், உலு கிந்தா, பெர்மாய் லேக் வியூ, பெர்சியாரன் லெம்பா பேர்பாடுவான்-னில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கொலை செய்ததாக அந்த முன்னாள் பாதுகாவலர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
கிந்தா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் ரோஹானி காசிம் கொலை வழக்கில் அந்த முன்னாள் பாதுகாவலருக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு மரணத் தண்டனை விதித்து.