பட்டர்வொர்த்,ஆகஸ்ட் 07-
பினாங்கு, பாகன் அஜாம்- மில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் தனது முன்னாள் காதலன் மேற்கொண்ட கொலை முயற்சி தாக்கதலில் பெண் ஒருவர், பொது மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்ட ஆடவர் கத்தியைப் பயன்படுத்தியதில் அந்தப்பெண்ணின் சுண்டு விரலில் பலத்த காயம் ஏற்பட்டதாக செபரங் பேராய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணியளவில் அந்தப் பெண்ணிடமிருந்து போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றனர். சம்பந்தப்பட்ட ஆடவர் தனக்கு தொல்லைக் கொடுப்பதாக அந்த பெண் முறையிட்டுள்ளார்.
போலீசார், அவ்விடத்திற்கு விரைவதற்குள் அந்த நபரின் கோரப் பிடியில் சிக்கி, அந்தப் பெண் எதிர்த்துப் போராடியுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணை கொலை செய்வதற்கு அந்த ஆடவர் கத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இதில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று ஏசிபி அனுார் குறிப்பிட்டார்.
இதனைப் பார்த்த பொது மக்கள், ஓடிச் சென்று அந்தப் பெண்ணை, காப்பாற்றியதுடன், அவ்விடத்திலிருந்து தப்பிக்க முற்பட்ட அந்த நபரை வளைத்துப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்ததாக ஏசிபி அனுார் தெரிவித்தார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.