கோலாலம்பூர், ஆகஸ்ட் 07-
வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைப்பதா? இல்லையா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரின் வாதத் தொகுப்பை செவிமடுத்த நீதித்துறை ஆணையர் ரோஸ் மாவார் ரோசைன், வரும் திங்கட்கிழமைக்கு தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.
நெங்கிரி சட்டமன்ற உறுப்பினராக தாம் நீக்கப்பட்டது செல்லது என்றும் அந்த தொகுதியின் சட்டப்பூர்வ உறுப்பினர் தாமே என்றும், அது தொடர்பான வழக்கிற்கு தீர்வு காணப்படும் வரையில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது அசிசி அபு நைம், வழக்கு தொடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையம், கிளந்தான் மாநில சபா நாயகர் உட்பட இதர தரப்பினருக்கு எதிராக அவர் இவ்வழக்கை சார்பு செய்துள்ளார்.