பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 07-
பல்வேறு மத நம்பிக்கையை பின்பற்றுகின்றவர்கள், தங்களுக்கு இடையில் அதிக சகிப்புத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் முன்னுரிமை அளிக்குமாறு மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக்கொண்டார்.
அவரவர் சார்ந்த மத நம்பிக்கை அடிப்படையிலான விவகாரங்கள் அல்லது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு கு முன்னதாக ஒருவரையொருவர் மனிதர்களாக பார்க்கும்படியும், / மனித நேயத்துடன் நடந்து கொள்ளும்படியும் / மேன்மை தங்கிய பேரா சுல்தான் வலியுறுத்தினார்.
இக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய புரிந்துணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தென்கிழக்காசியப் பிராந்திய அளவிலான மனித மாண்பு மற்றம் கண்ணியம் மீதான மாநாட்டில் உரையற்றிய சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா ஒரு பெளத்த மத துறவியின் தன்னலமற்ற தியாகத்தை நினைவுகூரும் கதையை தமது உரையில் பகிர்ந்து கொண்டார்.
மியான்மர், மாண்டலே- யில் உள்ள பெளத்த மடாலயத்திற்கு தலைமையேற்ற உசின் பெயின் என்ற ஒரு பெளத்தமதப் பிக்கு, அப்பகுதியில் கலவரம் வெடித்த போது நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை தனது மடாலயத்தில் தஞ்சம் புகுவதற்கு அனுமதி அளித்தார்.
அன்றிரவு நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய மற்றும் கோபம் அடைந்த மக்கள், அந்த மடாலயத்தின் வாசலில் நின்று கொண்டு, தஞ்சம் புகுந்த முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியதுடன் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கோரிய போது, அந்த பெளத்த பிக்கு அதனை அனுமதிக்கவில்லை. வாசலில் நின்றவாறு அவர்கள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை.
தஞ்சம் புகுந்த மக்களை பாதுகாப்பதற்காக அன்றிரவு முழுவதும் அங்கேயே காவல் காத்து நின்றார். தம்மால் அந்த பாதகத்தை செய்ய முடியாது என்றும், அப்படி செய்வதாக இருந்தால் முதலில் தன்னைக் கொன்று விட்டு அந்த பாதகத்தை செய்யுமாறு திட்டவட்டமாக அந்த பெளத்த பிக்கு தெரிவித்து விட்டார்.
அந்த பெளத்த பிக்குவின் மன உறுதியினால் கடைசியில் சோர்வு அடைந்து விட்ட அந்த கும்பல், அந்த மடாலயத்தின் வாசலிலிருந்து வெளியேறிவிட்டது.
அந்த பெளத்த பிக்குவைப் பொறுத்தவரை புகலிடம் தேடிவந்தவர்கள் முஸ்லிம்கள் என்பது முக்கியமல்ல. கடுமையான ஆபத்தில் உள்ள மனிதர்கள் என்றே அவர் கருதினார்.
எனவேதான் மக்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் வாழ்வுக்கான உரிமைக்காக காத்து நின்றார்.
பெளத்த பிக்கு உசின் பெயின் போன்று அசாத்தியமான துணிச்சலை நாம் கொண்டிக்க முடியாது என்றாலும் மத முத்திரையைக் காட்டிலும் மனித முத்திரைக்கு அதிக மதிப்பளிக்க வேண்டும். மனிதர்கள் மனிதர்களாக பார்க்க வேண்டும். அதன் பின்னரே மதத்தை பார்க்க வேண்டும் என்று மேன்மை தங்கிய பேரா சுல்தான் நஷ்ரின் ஷா தமது உரையில் வலியுறுத்தினார்.