கோலாலம்பூர், ஆகஸ்ட் 08-
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், போட்டியிடக்கூடிய தொகுதி பங்கீடுகள் குறித்து விவாதிப்பதற்கு முன்னர், தாங்கள் அங்கம் வகித்துவரும் தேசிய முன்னணியில், தனக்கான நிலை குறித்து ம.இ.கா. முடிவெடுக்கும் என அதன் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவரது அக்கூற்று, பெரிக்காதான் கூட்டணி தொடங்கி, 72 ஆண்டுகள் தேசிய முன்னணியுடன் இருந்தவரும் ம.இ.கா, அக்கூட்டணியிலிருந்து விலகுவதற்கான ஆருடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், ம.இ.கா., எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை தாங்கள் முதலில் முடிவு செய்ய வேண்டியுள்ளதாக கூறிய விக்னேஸ்வரன், தொகுதி பங்கீடுகள் குறித்து பின்னர் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளதால், தற்போதைக்கு, ம.இ.கா. நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக, நேற்று கோலாலம்பூரிலுள்ள ம.இ.கா. தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விக்னேஸ்வரன் கூறினார்.
அண்மையில், ம.இ.கா.வின் பாரம்பரிய தொகுதியான கோட்டா ராஜா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் வாய்ப்பை, தங்களுக்கு வழங்கும்படி, அத்தொகுதி அம்னோ தலைவர் செனட்டர் டத்தோ செரி உத்தமா தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
அக்கோரிக்கைக்கு அம்னோ தலைவர்டத்தூஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஆதரவு தெரிவித்த நிலையில், அது குறித்த பேச்சுகளை நடத்த, தங்கள் தரப்பு தயாராக உள்ளதாக, சிலாங்கூர் பக்காத்தான் ஹாராப்பான் தலைவர் டத்தூஸ்ரீ அமிருதின் ஷாரி கூறியிருந்தார்.
அது தொடர்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்னேஸ்வரன் அவ்வாறு கருத்துரைத்தார்.