கிள்ளான்,ஆகஸ்ட் 08-
வரும் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை கோலக் கிள்ளான் கடலோரப்பகுதியில் நீர் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கடலில் அலைகள் 4.8 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கிள்ளான் அரச மாநகர் மன்றம் கூறியது.
கோலக் கிள்ளான் நிலையத்தில் நாளை இரவு 8.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அலைகள் 4.6 மீட்டர் வரை உயரும் என மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளையில் பந்தர் கிளாங் மற்றும் செலாட் முரா நிலையங்களில் நீர் மட்டம் 3 மீட்டர் வரை உயர்ந்து அபாய அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வடிகால் மற்றும் நீர் பாசனத்துறையின் வெள்ளத் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.
இந்த இயற்கைச் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி கடலோரங்களில் வசிக்கும் மக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். வானிலை நிலவரங்களை அவர்கள் அணுக்கமாக கவனித்து வரும் அதேவேளையில் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.