கோலாலம்பூர், ஆகஸ்ட் 08-
பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மகன் சம்பந்தப்பட்ட ஒரு லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி தலைமையில் நடைபெறும்.
இவ்வழக்கு விசாரணை, இதற்கு முன்பு நீதிபதி ரோசினா அயோப் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. எனினும் அவர், இம்மாதம் 15 ஆம் தேதிக்கு பணியிடம் மாற்றப்படுகிறார்.
எனவே ஹம்சா ஜைனுடின் மகன் முஹம்மது பைசல் ஹம்சா சம்பந்தப்பட்டஇந்த லஞ்ச ஊழல் வழக்கு புதிய நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று இன்று தெரிவிக்கப்பட்டது.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது அவரின் அமைச்சரவையில் ஹம்ஸா ஜைனுதீன் உள்துறை அ மைச்சராக இருந்த நிலையில் அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரின் மகன் முஹம்மது பைசல் ஹம்சா, சந்தை வாய்ப்புக்காக Heitech Padu Berhad நிறுவனம் இரண்டு நிறுவனங்களை நியமித்துக் கொள்வதில் இஸ்மிர் அப்துல் ஹமீத் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.