கோலாலம்பூர், ஆகஸ்ட் 08-
லுமுட் அரச மலேசிய கடற்படையின் பயிற்சி வீரர் J. சூசைமாணிக்கம் திடீர் மரணம், ஒரு கொலையே என்று ஈப்போ உயர் நீதிமன்றத் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து இத்தகைய பாதகத்தை புரிந்த நபர்கள், நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்று 29 அரச சாரா அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இத தொடர்பாக விரிவான விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்புகள் வலியுறுத்தினர.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சூசைமாணிக்கம் மிக மர்மான முறையில் இறந்ததற்கு, உயர் நீதிமன்ற விசாரரணையின் மூலம் விடை காண முடிந்திருக்கிறது. அந்த வீரரின் மரணத்தில் பின்னணியில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன்-னிடம் மகஜர் ஒப்படைக்கும் நிகழ்வில் அந்த அமைப்புகள் இதனை வலியுறுத்தியுள்ளன.
Lawyers For Liberty என்ற மனித உரிமை அமைப்பின் வாயிலாாக அதன் வழக்கறிஞர் ஜைத் அப்துல் மாலிக்- குடன் இணைந்து அந்த அமைப்புகள் மகஜரை சமர்ப்பித்தன.