ஜொகூர் , ஆகஸ்ட் 08-
ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் தனது தந்தையுடன் இருந்த Leo Jia Hui,- என்ற 6 வயது சிறுமியை கடத்தியதாக ஆடவர் ஒருவர், கூலைய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
31 வயது லியாங் வின் சன் என்ற அந்த ஆடவர், மாஜிஸ்திரேட் அஸுரீன் சாஹிரா சௌஃபி அஃபாண்டி முன்னிலையில் நிறுத்தப்பட்டு மண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 20 ஆம் தேதி இஸ்கந்தர் புட்டேரி, தாமன் பொதனி, ஈகோ கேலரியா பேரங்காடி மையத்தில் அந்த 6 வயது சிறுமியை கடத்தியதாக அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தவிர, அந்த சிறுமியை கடந்த ஜுலை 23 ஆம் தேதி அதிகாலை 4.46 மணியளவில் சிலாங்கூர், உலு சிலாங்கூர், பத்தங் காளி, ஜாலான் மஹாகோனி – யில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்ததாக அந்த நபர் மீது மற்றொரு குற்றச்சாட்ட சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 363 மற்றும் 346 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த நபரின் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதேவேளையில் அவரை 50 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
எனினும் அந்த நபர் மேலும் 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருப்பதால் மீண்டும் கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.