திரெங்கானு , ஆகஸ்ட் 08-
அண்மையில் திரெங்கானு மாநிலத்தில் சீனக் கோவில் ஒன்றில் வருடாந்திர திருவிழாவையொட்டி படைக்கப்பட்ட கலைவிழாவில் மேடையில் தோன்றுவதற்கு பெண் கலைஞர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருப்பது மற்றும் சுல்தான் மிசான் அபிதீன் அரங்கில் கால்பந்துப் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள், பாலின ரீதியாக பிரிக்கப்பட்ட நடவடிக்கைக்கு கோட்டா கெமுனிங் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சி தலைமையிலான திரெங்கானு மாநில அரசாங்கம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று பிரகாஷ் சம்புநாதன் கேள்வி எழுப்பினார்.
பன்முகத்தன்மையிலான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு நாட்டை உருவாக்குவதற்காக நாம் போராடிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இன்னமும் காலாவதியான பழங்கால நடைமுறைகளை அமல்படுத்தி வரும் திரெங்கானு மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை வெட்ககேடாகும் என்று பிரகாஷ் சம்புநாதன் வர்ணித்தார்.
கோலத்திரெங்கானுவில குவான் டி சீனக்கோவிலில் கூடாரம் அமைக்கப்பட்டு, திறந்தவெளியில் கலைநிகழ்ச்சி படைக்கப்பட்டதால்தான், பெண் கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்று திரெங்கானு மாநில அரசாங்கம் கூறும் காரணம், ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என்று பிரகாஷ் சம்புநாதன் வாதிட்டார்.
இது போன்ற விதிமுறைகள், மலேசியப் பெண்களின் உரிமைகளை மட்டும் ஒடுக்கவில்லை. மாறாக, கலை, கலாச்சாரம் மற்றும் பேச்சுரிமையை மீறுவதற்கு ஒப்பாகும்.
தவிர நம் நாட்டில் கட்டிக்காக்கப்பட்டு வரும் பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுகிறது. பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.. தனிநபரின் அடிப்படை சுதந்திரம் மீறப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
திரெங்கானு மாநில அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை, உண்மையிலேயே பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று பிரகாஷ் சம்புநாதன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.