அறுவை சிகிச்சை தியேட்டருக்குள் நுழைந்த / அந்த 14 வயது போலி பெண் மருத்துவர் கைது /

செபாங் , ஆகஸ்ட் 08-

நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான செர்டாங் மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக ஒரு மருத்துவரைப் போல பணியாற்றிய வந்ததாக நம்பப்படும் 14 வயது போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத அந்த போலி பெண் மருத்துவர் குறித்து அந்த மருத்துவமனையின் பொறுப்பாளர்கள் நேற்று புதன்கிழமை போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த இளம் பெண் இன்று காலையில் மருத்துவமனையிலேயே கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டப் பெண், அறுவை சிகிச்சை தியேட்டருக்குள் நுழைந்து, அறுவை சிகிச்கைக்கு உதவப் போவதாககூறியதைத் தொடர்ந்து அவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்து, மருத்துவமனைப் பொறுப்பாளர்கள் போலீஸ் புகார் செய்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் மருத்துவமனைக்கு பணிக்கு திரும்பிய அந்த 14 வயது பெண், மருத்துவருக்கான போலி அடையாள ஆவணத்தை பயன்படுத்தி தன்னை பதிவு செய்து கொண்டு, மருத்துமனையின் வரவேற்பு அறைக்கு சென்றுள்ளார்.

அவரின் வருகையை உறுதி செய்தப்பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ஏசிபி வான் கமருல் தெரிவித்தார்.

செர்டாங் மருத்துவமனைக்கு சொந்தமான மருத்துவரின் நீல நிற Scrub சீருடை மற்றும் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த Lanyard அடையாள அட்டை ஆகியவை அந்தப் பெண்ணிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த 14 வயது பெண், ஒரு மருத்துவரைப் போல கடந்த ஒரு வார காலமாக செர்டாங் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் அம்பலமானது.

தன்னை அரசாங்க அதிகாரி என்று கூறிக்கொண்டு அத்துமீறி நுழைந்தது தொடர்பில் அந்தப் பெண்ணுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டு சிறை அல்லது 5 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் 14 வயது பெண் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி வான் கமருல் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS