அலோர் காஜா, ஆகஸ்ட் 09-
மலாக்கா, அலோர் காஜா மருத்துவமனையில் பணியில் இருந்த போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வேட்டை கிளப்பிய பாதுகாவலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அந்த பாதுகாவலர், மருத்துவமனையின் வருமானப் பிரிவு பகுதியில் கடமையாற்றிக்கொண்டு இருந்த போது கவனக்குறைவாக துப்பாக்கி வேட்டை கிளப்பியதாக கூறப்படுகிறது.
இதில் மருத்துவமனை ஊழியர்களோ அல்லது மற்றவர்களோ யாரும் காயம் அடையவில்லை என்றாலும் மிகுந்த கவனக்குறைவாக இருந்த 56 வயதுடைய அந்த பாதுகாவலர் விசாரணைக்கு ஏதுவாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
அந்த பாதுகாவலர் வைத்திருந்த ஷாட்-கன் வின்செஸ்டர் ரக துப்பாக்கி, கீழே விழுந்து, அதிலிருந்து வெளியேறிய துப்பாக்கிக்குண்டு, மருத்துவமனையின் பணம் செலுத்தும் முகப்பிடத்தை துளைத்ததாக மருத்தவமனை நிர்வாகத்திடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.