பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 09-
வயது குறைந்த பெண் ஒருவர், தன்னை மருத்துவர் என்று அடையாளம் கூறிக்கொண்டு, செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து, ஆள்மாறாட்டம் செய்து, பிடிபட்ட சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு MMA எனப்படும் மலேசிய மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரு வார காலமாக ஒரு மருத்துவரைப் போல் நடமாடிய 14 வயது பெண்ணின் அத்துமீறல் செயல், மருத்தவமனையின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் அஜிசான் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
இது போன்ற போலி மருத்துவர்கள் நடமாட்டமும், அத்துமீறல் செயல்களும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வினையாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான உரிமை ஆகியவை எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுதற்கு அதீத முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அஜிசான் வலியுறுத்தினார்.
எனினும் செர்டாங் மருத்துவமனையில் அந்த இளம் போலி மருத்துவர் வருகையினால் எந்த நோயாளியும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கு ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டாக்டர் அஜிசான்கோரிக்கை விடுத்துள்ளார்.