ஈப்போ , ஆகஸ்ட் 09-
போலீஸ்காரர் ஒருவர் குறிசுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் ஈப்போ, உலு கிந்தா, VAT 69 கொமாண்டோ, பயிற்சி தளத்தில் நிகழ்ந்தது. இதில் லான்ஸ் கோபரல் அந்தஸ்தைக் கொண்ட 27 வயது போலீஸ்காரரின் காதில், துப்பாக்கிக் குண்டு உரசி சென்று காயம் விளைவித்தது. .
இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், பிரயோகித்த துப்பாக்கிச்சூடு, அந்த போலீஸ்காரர் மீது பாய்ந்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் அஜிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
திரெங்கானு, டுங்குன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவைச் சேர்ந்த அந்த போலீஸ்காரர், சக 46 போலீஸ்காரர்களுடன் குறிசுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.