கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-
கோலாலம்பூர் குடிநுழைவு துறையினர் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் தலைநகரில் உள்ள இரண்டு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதிகளில் நடத்திய சோதனையில் 29 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் உட்பட 38 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
OP PINTU என்ற பெயரில் நடத்தப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் செந்தூலில் உள்ள 20 மாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள 25 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாக அதன் இயக்குநர் வான் முகமது சௌபீ வான் யூசோப் கூறினார்.
ஒவ்வொரு வளாகத்திலும் குடியிருந்த அனைவரும் வெளி நாட்டவர்களாகக் காணப்பட்டனர். அந்த வீடுகள் ஒவ்வொன்றும் 1,500 தலா வெள்ளிக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன என அவர் சொன்னார்.
இரண்டு ஆடம்பர அடுக்குமாடி தொகுதிகளில் 102 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து முதல் 64 வயதுக்குட்பட்ட 38 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக வான் முகமது குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 இந்திய பிரஜைகள், 11 பாகிஸ்தானியர்கள் 11 நேப்பாள நாட்டினர் மற்றும் நான்கு பிலிப்பினோக்களும் அடங்குவர்.