புத்ராஜெயா,ஆகஸ்ட் 09-
கேலனா ஜெய -வில் ஒரு சமயப் பள்ளிக்கு அருகில் சுராவ் ஒன்றின் கழிப்பறையில் ராம்போ கத்தியுடன் தோன்றிய ஆடவர் ஒருவர், அந்தப் பள்ளியின் பெண் தலைமையாசிரியர் உட்பட இருவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்தது.
இதனை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்ட அந்த மர்ம ஆசாமியை தேடும் நடவடிக்கையை தாங்கள் முழு வீச்சில் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளான 50 வயது பெண் தலைமையாசிரியரும், 20 வயது ஆசிரியரும் தற்போது ஷா ஆலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.