கோலாலம்பூர், ஆகஸ்ட் 12-
வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கேரி சட்டமன்ற இடைத் தேர்தலை தடுத்து நிறுத்துவதில் அதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது அசிசி அபு நைம் இரண்டாவது முறையாக இன்று தோல்விக் கண்டார்.
நெங்கேரி சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக தாம் தொடுத்துள்ள பூர்வாங்க வழக்கின் விசாரணை நடைபெற்று முடியும் வரையில் அந்த இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று பெர்சத்து கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான முகமது அசிசி அபு நைம் சார்வு செய்துள்ள வழக்கு மனுவை உயர் நீதிமன்ற ஆணையர் ரோஸ் மாவார் ரோசைன் தள்ளுபடி செய்தார்.
பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதீன், கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு எதிராக முகமது அசிசி வழக்கு தொடுத்திருந்தார்.