கோலாலம்பூர், ஆகஸ்ட் 12-
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி, இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு மரணம் விளைவித்ததாக லாஜிஸ்டிக் துறை பட்டதாரி ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் ஃபடின் தயானா முன்னிலையில் நிறுத்தப்பட்ட 23 வயது லிம் காங் லி என்ற அந்த பட்டதாரி, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 6.43 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் சேரஸ், தாமன் மிடா – வை நோக்கி, பிரதான சாலையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களான 22 வயது S. டினேஷ் ராஜ் மற்றும் 22 வயது R. பந்தாளரசன் ஆகியோருக்கு மரணம் விளைவித்தாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியப் பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1998 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த சீன இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அந்த நபர், தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருப்பதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் ஃபடின் தயானா அனுமதி அளித்தார்.