மற்ற வழிபாட்டுத்தளங்களுக்கு இஸ்லாமியர்கள் வருகை புரிய முடியும் / கல்விமான் கூறுகிறார்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 12-

இஸ்லாமியர்கள், மற்ற வழிபாட்டுத்தளங்களுக்கு வருகை புரியவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கல்விமான் ஒருவர் கூறுகிறார்.

தங்களின் அறிவாற்றலை பெருக்கிக்கொள்வதற்கும், அதிகாரத்துவப் பயணங்களிலும் இஸ்லாமியர்கள் மற்ற வழிபாட்டுத்தளங்களுக்கு செல்ல முடியும் என்று UCSI பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலை பேராசிரியரான தாஜுதீன் ரஸ்தி தெரிவித்தார்.

இஸ்லாமியர்கள் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை புரிவது அவர்களில் அறிவாற்றலை விரிவுப்படுத்துகிறது. குறிப்பாக பல இனங்கள் மற்றும் பல மதங்களை கொண்ட மலேசியா போன்ற நாடுகளுக்கு இது முக்கியமாகும் என்று அந்த பேராசிரியர் வலியுறுத்துகிறார்.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த தங்கள் பொறுப்பாளர்கள், கோலாலம்பூரில் உள்ள கோவில் ஒன்றுக்கு வருகை மேற்கொண்டது தொடர்பில் பேரா மாநில இஸ்லாமிய சமய இலாகா பகிரங்க மன்னிப்பு கோரியது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் அந்த இஸ்லாமிய கல்விமான் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு வழிபாட்டுத்தலத்திற்கு வருகை புரிவது மூலம் அவர்களின் தொழில்நுட்பங்கள் மற்றும் கலை, கலாச்சாரம் மற்றும் சம்பிரதாயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் கருத்து பரிமாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்கூட, வழிபாட்டுத்தளங்களுக்கு வருகை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் இத்தைகைய வருகை, நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பாக சுற்றுலாத்துறைக்கு உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தங்களின் அதிகாரத்துவ அலுவல் பயணத்தின் போது, மற்ற வழிபாட்டுத்தளங்களுக்கு செல்லவும் இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவதாக பேராசிரியர் தாஜுதீன் ரஸ்தி தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு காலமான இரண்டாவது எலிசபெத் அரசியாரின் நல்லடக்கச் சடங்கில் இறுதி மரியாதை செலுத்துவதற்கு முந்தைய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா , / Westminster Abbey அரச தேவாலயத்திற்கு சென்றதையும் பேராசிரியர் தாஜுதீன் ரஸ்தி நினைவுகூர்ந்தார்.

இது போன்ற அதிகாரத்துவ நிகழ்வுகள் நடைபெறும் பட்சத்தில் இஸ்லாமியர்கள் அதில் கலந்து கொள்ள முடியும் என்று பேராசிரியர் தாஜுதீன் ரஸ்தி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS