கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-
இரண்டு கோடியே 19 லட்சம் வெள்ளி இழப்பை ஏற்படுத்திய Warburg Pincus என்ற முதலீட்டுத் திட்டத்தில் மோசடி புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 10 நபர்களை அரச மலேசிய போலீஸ் படை கைது செய்துள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பேரா, கெடா, சபா மற்றும் சரவாவில் மேற்கொள்ளப்பட்ட கைது வேட்டையில் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஐந்து ஆண்களையும், ஐந்து பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
21 க்கும் 52 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத் பேரும் சம்பந்தப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளர்களாக, இயக்குநர்களாக செயல்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத்தடுப்பு இயக்குநர்டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார்.
உலகில் முன்னணி முதலீட்டு நிறுவனமான Warburg Pincus பெயரைப் பயன்படுத்தி, இணையத் தொடர்பின் மூலம் இந்த கும்பல் மோசடி வேலையில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.