முக்கியம்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் குரல் கொடுக்க வேண்டும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வெறிச்செயலை கண்டிக்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று Dinamik Sinar kasih Malaysia சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோலாலம்பூருக்கும், டாக்காவிற்கும் இடையிலான அரச தந்திர உறவு பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இத்தகைய வன்முறையை உடனடியாக கண்டிக்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து கேள்விக்குறியாகி இருக்கும் அந்நாட்டில் உள்ள இந்துக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அக்கறை மிகுந்த கோரிக்கையை தாம் வரவேற்பதாக டத்தோ சிவகுமார் தெரிவித்தார்,

வங்காள தேசத்தில் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்து வரும் மோதலால் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருப்பது மலேசியாவில் உள்ள இந்துக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் வங்காளதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ஆயிரக்கணக்கான வங்காளதேசிகள் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர்.

தங்களின் தாயகத்தில் ஏற்பட்டுள்ள மோதலினால் தங்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக மலேசியாவில் உள்ள வங்காளதேசத் தொழிலாளர்கள், தங்களின் பாசத்திற்குரிய குடும்பத்தினரை காண்பதற்கு நாட்டை விட்டு ஓடக்கூடும்.

இந்நிலையில் வங்காளதேசத்தில் நிகழ்கின்ற மோதல்கள் குறித்து கோலாலம்பூர் தனது நிலைப்பாட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் கேட்டுக்கொண்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்களின் நல்வாழ்வுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் எவ்வாறு குரல் கொடுத்து வருகிறாரோ அதேபோன்று வங்காளதேசத்தில் இந்துக்ளுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற வன்முறைக்கு எதிராகவும் பிரதமர் குரல் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக, அனைத்து இனத்தவர்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார், வங்காளதேசத்தில் நிகழும் அட்டூழியங்கள் குறித்து அனைத்துலக அரங்கில் மலேசியாவின் நிலைப்பாட்டை துணிந்து விளக்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS