மூவார், ஆகஸ்ட் 14-
வீட்டிற்கு தீயிட்டு, தனது தாய்தந்தை உட்பட மூன்று குடும்ப உறுப்பினர்களை உயிரோடு கொளுத்தி, கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜோகூர் போலீசாரால் கடந்த நான்கு நாட்களாக தீவிர தேடப்பட்டு வந்த அந்நபர், இன்று புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கோலாலபூர், புக்கிட் பிந்தாங்- கில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்த போது போலீசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
48 வயதுடைய அந்த நபர், இன்று காலை 9 மணியளவில் ஜோகூர், மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர். .
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஜோகூர்,பாகோ, கம்போங் பாயா ரெடான்- னில் நிகழ்ந்த இந்த தீச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரின் 82 வயது தந்தை, 76 வயது தாயார் மற்றும் அவர்களின் 11 வயது பேத்தி ஆகிய மூவர், வீடு பூட்டப்பட்ட நிலையில் தீவைக்கப்பட்டு, உயிரோடு கொளுத்தப்பட்டதாக கூறப்படுகிறது..
இச்சம்பவத்திற்கு பின்னர் அந்த ஆடவர் மூவார், பெண்டாயன் பேருந்து நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை கைவிட்டு, பேருந்து மூலம் கோலாலம்பூர்,பந்தர் தாசிக் செளதான் ,டிபிஎஸ் பேருந்து நிலையத்தை வந்தடைந்து, தலைமறைவானதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.