மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரினார் அமைச்சர் ஹன்னா யோவ்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதலாவது தங்கத்தை வென்றிட வேண்டும் என்ற மலேசியாவின் நீண்ட காலப் போராட்டத்தில், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் அந்த முயற்சி வெற்றியளிக்காதது குறித்து இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ், மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

கடந்த 1956 ஆம் ஆண்டில் மலேசியா முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது முதல் உலகத் தரத்திலான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒரு முறைகூட தங்கத்தை வெல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

நாம் தோல்வி அடையவில்லை. ஆனால் வெற்றிப்பெறவில்லை என்று மலேசிய விளையாட்டுக்குழுவினருடன் பாரிஸிலிருந்து நேற்று நாடு திரும்பிய அமைச்சர் ஹன்னா யோவ், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கத்தை வென்று, மலேசியாவின் 68 ஆண்டு கால ஏக்கத் தாபத்தை தணித்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையிலேயே ஆர்டிஜி எனப்படும் Road To Gold திட்டத்தை மலேசியா கடந்த ஆண்டு தொடங்கியது.

ஆனால், அந்த திட்டம், 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மட்டுமின்றி 2028 ஆம் ஆண்டு அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் – ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியையும் சேர்த்து வகுக்கப்பட்ட ஒரு நீண்ட காலத் திட்டமாகும் என்று அமைச்சர் ஹன்னா யோவ் விளக்கினார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் நமது வீரர்களும் வீராங்கனைகளும் சிறந்த அடைவு நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மூன்று வீரர்கள் தேசிய சாதனையை முறியடித்துள்ளனர். சைக்கிள் தடக்கள வீரர், வீராங்கனையான டத்தோ அஜிசுல்ஹாஸ்னி அவாங் மற்றும் நூருல் இஸ்ஸா முகமட் அஸ்ரி, எடைத் தூக்கும் வீரர் முகமது அனிக் கஸ்தான் ஆகியோர் சாதனைப் படைத்துள்ளனர்.

எனினும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மலேசிய விளையாட்டு வீரர்கள் , வீரங்கனைகளின் செயல் திறன் குறித்து நாடாளுமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஹன்னா யோவ் தெரிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் / பூப்பந்துப் போட்டியில் இரட்டையர்களான ஆரோன் சியா – சோ வூய் சிக் ஜோடியும் மற்றும் ஒற்றையர் பிரிவில் லீ ஜி ஜியா ஆகியோர் இரண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றனர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மலேசியா இதுவரையில் 8 வெள்ளிப் பதக்கங்களையும், 7 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளது.

மலேசியாவிற்கு முதலாவது வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தவர்கள் பூப்பந்து உலகின் முன்னணி ஜம்பவான்களாக விளங்கிய பஞ்ச் குணாளன் ( Punch Gunalan ) மற்றும் இங் பூன் பீ ஆவர்.

1972 ஆம் ஆண்டு ஜெர்மனி, முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இருவரும் வெள்ளிப் பதக்கத்தை பெற்று தந்து, மலேசியாவின் புகழை உலகளவில் உயர்த்தி நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS