பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-
பாரிசான் நேஷனலின் இளைஞர் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள அம்னோ இளைஞர் பிரிவு, மிக அற்பமான சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் நாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த பெரிய விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜெய்த் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
கம்யூனிஸ்டு சிந்தாந்தத்தை கொண்டது என்று கூறப்படும் DAP உறுப்பினர் ஒருவரின் நகைச்சுவைப் புத்தகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசாங்கம் மீட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவு தொடர்பில் தனது எதிர்ப்பை பதிவு செய்வதிலும், அதிருப்தியை வெளிப்படுத்துவதிலும் அம்னோ இளைஞர் பிரிவு, அதிக கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டுக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய உருப்படியான காரியங்களில் ஈடுபட வேண்டும் முன்னாள் கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஜெய்த் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் உணர்ச்சிகரமான விவகாரங்களை உண்மையிலேயே பாதுகாக்கின்ற ஓர் இளைஞர் அமைப்பாக அம்னோ இளைஞர் பிரிவு இருக்குமானால்,/வீடியோ அல்லது வாட்ஸ்அப் வாயிலாக தலாக் ( Talak ) சொல்லி, விவகாரத்து செய்வதிலிருந்து முஸ்லிம் கணவர்மார்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று ஜெய்த் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
கணவன், மனைவி என்ற உயர்ந்த பந்தத்தையும் –உறவையும் கொண்ட குடும்பப் பிணைப்பில், செல்லத்தக்க சாட்சிகளின் முன்னிலையில் சட்டப்பூர்வமாக மனைவியை விவகாரத்து செய்வதற்கு திராணியில்லாத இது போன்ற முஸ்லீம் ஆண்களைப் பற்றி நாட்டில் உள்ள மக்கள் என்ன நினைப்பார்கள் என்று ஜெய்த் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
அண்மையில் பிரபலமான ஒரு முஸ்லிம் பாடகியை அவரின் கணவர், வீடியோ பதிவின் வாயிலாக தலாக் சொல்லி, விவகாரத்து செய்துள்ளார்.