காஜாங் மெட்ரோ பிளாசா நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய / சந்தேகப் பேர்வழி சுட்டுக்கொல்லப்பட்டான்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-

கடந்த ஜுன் 17 ஆம் தேதி மக்கள் நடமாட்டம் மிகுந்த காஜாங் மெட்ரோ பிளாசா பேரங்காடி நகைக்கடையில், துப்பாக்கி முனையில் 32 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 முகமூடி கொள்ளையர்களில் ஒருவன், போலீசாரின் அதிடித் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

காஜாங் அருகில் Silk நெடுஞ்சாலையில் சுங்கை பாலக் டோல் சாவடி அருகில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த கொள்ளையன் சூட்டு வீழ்த்தப்பட்டான்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் புலன் விசாரணைப்பிரிவு, சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்த ஒரு காரை அடையாளம் கண்டு அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.

காரில் இருந்த நபர், திடீரென்று போலீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார். போலீசார், பதிலடித் தாக்குதலில் ஈடுபட்ட போது அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது துப்பாக்கிக் குண்டு சிதறல், போலீஸ்காரர் ஒருவரின் துண்டுத் துளைக்காத பாதுகாப்பு பட்டையை உரசி சென்றதில் அவர் சொற்ப காயத்திற்கு ஆளானதாக டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 6 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளார். கடந்த ஜுன் மாதம் காஜாங் மெட்ரோ பிளாசா பேரங்காடி நகைக்கடையில் நடந்த கொள்ளையிலும் சம்பந்தப்பட்டுள்ளார்.

பாதுகாவலர் சீருடையில் அந்த நகைக்கடைக்குள் நுழைந்த முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்கள், இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு PUMP GUN துப்பாக்கியை ஆயுதமாக கொண்டு, நடத்திய துணிகர கொள்ளை சம்பவத்தில், சுட்டுக்கொல்லப்பட்ட நபருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ உசேன் உமர் தெரிவித்தார்.

இக்கொள்ளைச் சம்பவத்தின் போது அந்த பேரங்காடி மையத்தின் வாடிக்கையாளர்கள் மிக பதற்றத்துடன் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில், நகைகள் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழைகளை சுத்தியலால் பலம் கொண்டு அடித்து நொறுக்கி, நகைகள் கொள்ளையிடப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வரைலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

WATCH OUR LATEST NEWS