பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-
கோலாலம்பூர் மாநகரில் விபச்சாரக்கூடங்கள் மற்றும் சட்டவிரோத வணிகத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் அவற்றுக்கு பாதுகாப்பு அளித்து, லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படும் மாநகர் மன்றத்தின் துணை இயக்குநர் மற்றும் ஐந்து அமலாக்க அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
விபச்சாரக்கூடங்கள் நடத்துநர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்ததாக துணை இயக்குநரும், அவருக்கு கீழ் உள்ள அமலாக்க அதிகாரி ஒருவரும் ஷா ஆலாம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவர்.
அதேவேளையில் லைசென்ஸின்றி நடத்தப்பட்டு வந்த வணிகத்தளங்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்ததற்காக லஞ்சம் பெற்றதாக இதர நான்கு அமலாக்க அதிகாரிகள் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி வரை லஞ்சம் பெற்று வந்ததாக துணை இயக்குநர் மீது மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருக்கின்றன. அவரின் கீழ் உள்ள ஒரு அமலாக்க அதிகாரி விபச்சாரக்கூடங்களில் லஞ்சம் பெற்று வந்தாக குற்றஞ்சாட்டப்படுவர் என்ற SPRM வட்டாரங்கள் தெரிவித்தன.